Archives: ஆகஸ்ட் 2021

இயேசுவை பகிர்தல்

டுவைட் மூடி (1837-99) என்னும் சுவிசேஷகர் இரட்சிக்கபட்ட பின்னர், ஒரு நாளைக்கு ஒருவரிடத்திலாவது சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை என்று தீர்மானித்தார். வேலைப்பளுவின் நிமித்தம் சில வேளைகளில் அவருடைய தீர்மானத்தை வெகு தாமதமாய் நினைவுகூருவதுண்டு. அப்படித்தான் ஒரு நாள் அவர் படுக்கையிலிருக்கும்போது அவருடைய தீர்மானம் அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து வெளியே போனார். மழை பெய்யும் இந்த நள்ளிரவில் யாரும் இருக்கமாட்டார்களே என்று எண்ணினார். அங்கே சாலையில் குடையோடு நடந்துபோய்க் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தார். வேகமாய் ஓடி, அவருடைய குடையில் தனக்கு அடைக்கலம் கேட்டார். அனுமதி கிடைத்ததும், “புயலின் நடுவில் தங்குவதற்கு உங்களுக்கு இடமிருக்கிறதா? நான் இயேசுவைக் குறித்து உங்களுக்கு சொல்லவா? என்று சுவிசேஷத்தை பகிரத் துவங்கினாராம். 

பாவத்தின் விளைவுகளிலிருந்து தேவன் நம்மை எப்படி இரட்சிக்கிறார் என்றும் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள மூடி எப்போதும் ஆயத்தமாயிருந்தார். அவருடைய நாமத்தையும், “அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்” (ஏசாயா 12:4) என்று இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு மூடி கீழ்ப்படிந்தார். இஸ்ரவேலர்கள் அழைக்கப்பட்டது “அவருடைய நாமம் உயர்ந்ததென்று” பிரஸ்தாபம்பண்ணுவதற்கு மாத்திரம் இல்லை, அத்துடன் சேர்த்து தேவன் எப்படி அவர்களின் இரட்சிப்பாய் மாறினார் (வச. 2) என்பதை அறிவிக்கவும் அழைக்கப்பட்டனர். நூற்றாண்டுகள் கழித்து, இன்று நாம் இயேசு மனிதனான ஆச்சரியத்தையும், சிலுவையில் மரித்து, உயிர்தெழுந்த சத்தியத்தையும் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். 

மூடி செய்தது போல, யாரோ ஒருவர் துணிந்து நம்மிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து அறிவித்ததினாலேயே நாம் அவரின் அன்பைக் குறித்து கேள்விப்பட்டோம். நாமும் நம்மை இரட்சித்தவரைக் குறித்து நமக்குகந்த வழியில் மற்றவர்களுக்கு அறிவிக்கலாமே.

கிருபையும் இரக்கமும்

தேசிய நெடுங்சாலையின் நடுவில் இருந்த திட்டில் ஒரு சூரியகாந்தி பூ ஒன்று தனித்து ஓங்கி வளர்ந்திருந்தது. அதுவும் வேகப்பாதையின் மிக அருகாமையில் வளர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சூரியகாந்தி பூவும் தென்படாத பட்சத்தில், இந்த ஒற்றைப் பூவைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நெடுஞ்சாலையின் நடுவில் இப்படியொரு செடியை தேவனால் மட்டுமே வளர்க்கமுடியும். அவ்வழியாய் அவசர அவசரமாய் கடந்து செல்லும் பயணிகளை புன்முறுவலோடு வரவேற்று, மென்மையாய் வழியனுப்பிக் கொண்டிருந்தது. 

அதைப்போன்று ஆச்சரியப்படும் நேர்மையான ஓர் யூதேய ராஜாவைக் குறித்து பழைய ஏற்பாடு அறிவிக்கிறது. அவனுடைய தகப்பனும் தாத்தாவும் விக்கிரக  வழிபாட்டில் திளைத்திருந்தனர். யோசியா ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்களில், “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட” ஆரம்பித்தான் (2 நாளாகமம் 34:3). “ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு” கட்டளையிட்டான். பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆலயத்திலிருந்து நியாயப்பிரமாண புத்தகத்தை கண்டெடுக்கின்றனர் (பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள்) (வச. 14). பின்பு தேவன் யோசியாவின் ஆவியை எழுப்பி, தேசத்தின் மக்களை அவர்களின் முற்பிதாக்களின் தேவனுக்கு நேராய் திரும்பும்படி செய்தார். யோசியா “உயிரோடிருந்த நாளெல்லாம்” (வச. 33) மக்கள் கர்த்தரை சேவிக்கும்படி செய்தான். 

கற்பனை செய்துபார்க்க முடியாத இரக்கங்களினால் நிரப்பகிறவர் நம் தேவன். வாழ்க்கையின் சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் சிறப்பான நன்மை ஒன்றை ஆச்சரியப்படும் வகையில் பூக்க வைக்க அவரால் முடியும். அவரை நோக்கிப் பாருங்கள். அதை இன்றும் அவரால் செய்யமுடியும். 

சுவிசேஷத்தின் வல்லமை

பண்டைய ரோமாபுரிக்குக்கென்று ஒரு “சுவிசேஷம்” இருந்தது. வெர்ஜில் ஸியூஸ் என்னும் கவிஞர், தேவர்களுக்கெல்லாம் தேவன், முடிவில்லாத ஒரு ராஜ்யத்தை ரோமர்களுக்கு கொடுத்துள்ளார் என்று கூறுகிறார். தேவர்கள் அகஸ்து ராயனை தேவ குமாரனாகவும், உலக இரட்சகராகவும், அமைதியும் செழிப்பும் நிறைந்த பொற்காலத்தை உலகத்திற்கு கொடுக்கப்போகிறவராகவும் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதே அந்த சுவிசேஷம். 

ஆனால் இந்த சுவிசேஷம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரோம இராணுவத்தின் அடக்குமுறையும் உயிர்சேதங்களும் இந்த சுவிசேஷத்தை வரவேற்புடையதாய் மாற்றவில்லை. அகஸ்துராயனின் சாம்ராஜ்யம் சட்டவிரோதமாக மக்களை அடிமைப்படுத்தி, ஆளும் வர்க்கம் மட்டுமே திருப்தியடைந்திருக்கும்படி செய்தது. 

இந்த சூழ்நிலையிலிருந்தே பவுல் தன்னை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளுகிறான் (ரோமர் 1:1). இந்த சூழ்நிலையில் நின்றே இயேசு என்ற பெயரை பவுல் ஒரு காலத்தில் வெறுத்தான். தன்னை யூதருக்கு ராஜா என்றும் உலக இரட்சகர் என்றும் இயேசு அறிவித்ததற்காய் பாடுகள் அனுபவித்ததும் இதே சூழ்நிலையில் தான். 

இந்த நற்செய்தியையே பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தில் பகிர்ந்து கொள்ளுகிறார். இந்த சுவிசேஷத்தை “விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16). ஆம்! ராயனின் ஆளுகையில் உபத்திரவப்படும் மக்களுக்கு இது எவ்வளவு அவசியம்! சிலுவையிலறையப்பட்டு, பின் உயிர்தெழுந்து, தன் அன்பை பிரதிபலித்து சத்துருக்களை வென்ற இரட்சகரின் சுவிசேஷ செய்தி இங்கு பிரசங்கிக்கப்பட்டது. 

நல்ல முடிவு

என்னுடைய கணவரும் மகனும் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றி தங்களுக்கு பிடித்தமான திரைப்படம் ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதின் கடைசி காட்சிகளை பார்க்கும்போதே, அடுத்த படத்தைத் தேட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிரியமான எட்டு படங்களை கண்டுபிடித்தனர். பொறுமையிழந்த நான், ஏன், ஏதாவது ஒரு படத்தை தேர்வுசெய்து அதை முதலிலிருந்து பார்க்கலாமல்லவா என்றேன். அதற்கு என் கணவர், “நல்ல முடிவுக் காட்சி யாருக்கு தான் பிடிக்காது?” என்று புன்முறுவலோடு சொன்னார். 

நானும் எனக்கு பிடித்தமான புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் நல்ல முடிவை எதிர்பார்த்து தான் காத்திருப்பேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். என் வேதாகமத்திலும், எனக்கு பரீட்சையமான, பிடித்த கதைகள், எளிதில் புரியும் வேதப்பகுதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜீவனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் கொண்டு பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையை மறுரூபமாக்கி, கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கையின் முடிவு சம்பூரணமாயிருக்கும் என்று உறுதியளிக்கிறார்.

“நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” என்று கிறிஸ்து கூறுகிறார் (வெளி. 22:13). மேலும் அவர், அவருடைய ஜனங்கள் நித்திய வாழ்;க்கையை சுதந்தரிப்பர் என்றும் (வச. 14), “இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை” (வச. 18-19) கூட்டவும் குறைக்கவும் கூடாது என்றும் கூறுகிறார். 

வேதத்திலுள்ள எல்லா காரியங்களையும் நாம் அறிந்துகொள்வது முடியாமல் இருக்கலாம். ஆனால் இயேசு தான் சொன்னபடி நிச்சயமாய் திரும்பி வருவார் என்பதை அறிந்திருக்கிறோம். அவர் பாவத்தை அழித்து, கோணலானவைகளை நேராக்கி, எல்லாவற்றையும் புதிதாக்கி, நம்முடைய அன்புள்ள ராஜாவாய் என்றும் அரசாளுகிறார். இது தற்போது நம்மை புதிய ஆரம்பத்திற்குள் நடத்தும் அழகான முடிவு!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான கீழ்ப்படிதல்

எங்கள் திருமணத்தின்போது, எங்கள் போதகர் என்னிடம், “உன் கணவரை நேசிக்கவும், மதிக்கவும், கீழ்ப்படிவதாகவும் உறுதியளிக்கிறீர்களா? நீங்கள் இறக்கும் வரை இணைந்திருப்பீர்களா?” என்று கேட்டார். என் கணவரைப் பார்த்து, “கீழ்ப்படிதலா?”  என்று நான் கிசுகிசுத்தேன். நாங்கள் எங்கள் உறவை அன்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பினோம். நான் உறுதியயெடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட குருட்டுத்தனமான கீழ்ப்படிதல் அல்ல. நான் கீழ்படிதல் என்ற வார்த்தையை புரிந்துகொண்டு, மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவித்தபோது, அந்த நிகழ்வை என்னுடைய மாமனார் தன்னுடைய கேமராவில் படம்பிடித்தார். 

பல ஆண்டுகளாக, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எனது எதிர்ப்பும், கணவன்-மனைவி இடையே உள்ள நம்பமுடியாத சிக்கலான உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். கீழ்ப்படிதல் என்றால் “அடிபணிக்கப்பட்ட” அல்லது “கட்டாயமான சமர்ப்பணம்” என்று நான் புரிந்திருந்தேன். இந்த புரிதலை வேதாகமம் ஆதரிக்கவில்லை. மாறாக, வேதாகமத்தில் உள்ள கீழ்ப்படிதல் என்ற வார்த்தை, நாம் தேவனை நேசிக்கக்கூடிய பல வழிகளை வெளிப்படுத்துகிறது. நானும் என் கணவரும் முப்பது வருட திருமண வாழ்க்கையை கொண்டாடிய போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாங்கள் இன்னும் இயேசுவையும், ஒருவரையொருவரையும் அதிகமாய் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசு சொன்னதின் மூலம், வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிவது அவருடன் தொடர்ந்து அன்பான மற்றும் நெருக்கமான உறவின் விளைவாக இருக்கும் என்று அவர் நமக்குக் காண்பித்துள்ளார் (வச. 16-21).

இயேசுவின் அன்பு தன்னலமற்றது, நிபந்தனையற்றது; ஒருபோதும் வலுக்கட்டாயமானதோ அல்லது தவறானதோ அல்ல. நம்முடைய எல்லா உறவுகளிலும் நாம் அவரைப் பின்பற்றி கனப்படுத்தும்போது, அவருக்குக் கீழ்ப்படிவதை ஞானமான, அன்பான நம்பிக்கை மற்றும் ஆராதனையின் விளைவாகக் காண பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவாராக. 

 

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.

 

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.